ஹரா- திரை விமர்சனம்
மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று தியேட்டரில் வெளிவந்திருக்கும் "ஹரா" எப்படி இருக்கு விமர்சனம் இதோ ...
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்ட மோகன், 80களில் கொடிகட்டி பறந்த நடிகர். 80களின் இறுதிக்கு பிறகு அவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
2008-ல் வெளியான ‘சுட்ட பழம்’ படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசி படம். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது ‘ஹரா’.
கதை :
கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன். திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவே, குடும்பம் நிலைகுலைகிறது. இதன்பிறகு தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையில் இறங்கி ஹீரோயிசம் காண்பிக்கும் கதைதான் இந்த ஹரா.
திரைக்கதை :
இன்னொருபுறம் ஹீரோவால் பாதிக்கப்பட்டு வேலை, குடும்பத்தை இழந்த முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் தலைமையிலான ஆட்கள் இவரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். தனது மகளின் மரணத்துக்கான காரணம் குறித்த தேடலின்போது ஹீரோ செய்யும் சில வேலைகள் போலீஸின் கவனத்தை இவரை நோக்கி கொண்டு வந்துவிடுகின்றன. ஹீரோவின் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைத்ததா, இறுதியில் என்னவானது என்பதே ‘ஹரா’ படத்தின் திரைக்கதை.
மோகன் கம்பேக் :
ரஜினி, கமல் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென ஒரு பாணியையும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர் மோகன். தான் நடிக்கும் படங்கள் என்றாலே எப்படியும் ஓடிவிடும் என்ற மினிமம் கேரன்டியை தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் கொடுத்தவர். அப்படிப்பட்ட ஒரு நடிகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வருகிறார் என்றால் அப்படம் எப்படி இருந்திருக்க வேண்டும்?
MAKING :
ட்ரெய்லரிலேயே இது ஒரு பழிவாங்கும் கதைதான் என்பதை புரிய வைத்த இயக்குநர், திரைக்கதையில் அதற்காக எந்தவொரு சிரத்தையும் எடுக்காமல் மேலோட்டமாக எழுதி இயக்கி இருக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பெரும்பாலான காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கின்றன. கதை ஓட்டம் , வசனங்கள், காட்சியமைப்பு, நடிப்பு என அனைத்துமே ஒரு பெரிய திரை சீரியலை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வையே தருகின்றன.
Comments
Post a Comment