முற்பிறவி பாவங்களைப் போக்கும் சந்திர தரிசனம்

இன்று (07.06.2024) சந்திர தரிசனம்...


சந்திர தரிசனத்தின் சிறப்பு :

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தை போக்கும் என்பார்கள். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு வருவதற்கு முன்னே சுமார்  6.30 மணியளவில் மேற்கு வானில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார்.

எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் "சந்திர தரிசனம் அல்ல". அந்த சிவபெருமானின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும்.

அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

சந்திரனை வணங்கும் முறை :

ஒரு தாம்பூல  தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி, அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு, மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

அப்போது இறைவனை மும்மூர்த்தியாக பாவித்து வணங்க வேண்டும். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு மற்றும் தண்ணீர் என தர்மம் செய்திருக்க வேண்டும்.

மேலும் சந்திரனிடமும், வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும்போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது ஆகும்.

ஸ்ரீகிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனுதினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். அதனால் அடி பணிந்து முழு மனதோடு வணங்க வேண்டும்.

இவ்வாறு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம். ஆயுளுக்கும் செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.

வணங்கி முடித்த பின் முதலில் வெள்ளி அல்லது தங்க நகைகளைக் காண்பது இன்னும் சிறப்பு. 

பலன்கள் :

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும், கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும், சந்தோஷமும் தேடிவந்து கிடைக்கும்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.

திருமணமானவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணமாகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

அமாவாசை - முன்னோர்களை வழிபடும் முக்கிய நாள் https://meelpaarvai.blogspot.com/2024/06/blog-post_74.html

Comments

Post a Comment

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்