அமாவாசை - முன்னோர்களை வழிபடும் முக்கிய நாள்

இன்று அமாவாசை.. காகத்திற்கு உணவளித்து.. முன்னோர்களின் ஆசிகளை பெறுங்கள்..!!


அமாவாசை - முன்னோர்களை வழிபடும் முக்கிய நாள்

💫அமாவாசை, முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் ஆகும். மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோர்களை ஆராதித்து, அவர்களை வணங்கினால் நாமும், நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக, பித்ரு சாபம் இல்லாமல், பெருமகிழ்வுடன் வாழலாம்.

💫அமாவாசை நாளில் இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து செய்கின்ற வழிபாடு மற்றும் அன்னதானம் போன்றவற்றை ஏற்று கொள்வதற்காக முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.

💫நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை ஆத்மாக்களை மகிழ்விக்கும் செயலாகும். இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும், நம் சந்ததியினருக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

💫இறந்த தாய், தந்தைக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், இறந்த தேதி மற்றும் திதி போன்றவற்றை மறந்தவர்கள் மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம்.

விரதம் இருப்பது எப்படி?

💫அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

💫அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.

💫முன்னோர்களுக்கு படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.

💫முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

💫அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானம் செய்வதும் புண்ணியத்தைத் தரும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

💫நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்ப்பணம், வருஷ சிரார்த்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம்

💫அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

💫காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

ஏழைகளுக்கு தானம்

💫அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

💫அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது.


Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்