பிரளயம் காத்தவிநாயகர்

ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள்  போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம்.

தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.

இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது திருப்புறம்பயம் - பிரளயம் காத்தவிநாயகர்.

3.பிரளயம் காத்தவிநாயகர் - திருப்புறம்பயம்.


தலவிசேஷம்:

திருப்புறம்பயத்தில் உள்ள விநாயகருக்குப் "பிரளயம் காத்த விநாயகர்" என்று பெயர். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பெருவெள்ளம் வந்து அழிவை ஏற்படுத்தும். இதற்குப் பிரளயம் என்று பெயர்.

அவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. சிவபெருமான் இப்பிரளயத்திலிருந்து இந்தத் தலத்தைக் காத்தருளத் திருவுள்ளம் கொண்டு, விநாயகப் பெருமானை நோக்கி இத்தலத்தைப் பிரளயத்திலிருந்து காத்தருளுமாறு திருவாய் மலர்ந்தார். ஸ்ரீவிநாயகப் பெருமானும், ஏழுகடல்களின் வெள்ளப்பெருக்கை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். அப்போது வருணபகவான் விநாயகப் பெருமானை சங்கு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றால் செய்து "பிரளயம் காத்த விநாயகர்" என்ற திருநாமம் இட்டுப் பிரதிஷ்டை செய்தார்.

பெயர்க்காரணம்:

இத்தலத்துக்கு முற்காலத்தில் "புன்னாகவனம்" எனப்பெயர் வழங்கியது. விநாயகப் பெருமான் பிரளயத்திலிருந்து காத்தமையால் "பிரளயம் காத்த விநாயகர்" என்ற திருநாமம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு இவ்வூரை அழிக்காமல் நின்றதால் "புறம்பயம் "திருப்புறம்பயம்" என்று அழைக்கப்பட்டது.

சரித்திர நிகழ்ச்சிகள் :

இவ்வூரில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஒரு போர் நடந்தது. பல்லவ வம்ச அரசரான அபராஜிதவர்ம பல்லவனுக்கும் பாண்டி நாட்டு மன்னனுக்கும் பெரும்போர் நடந்தது. பல்லவமன்னனுக்கு விஜயாலய சோழனின் மைந்தன் முதலாம் ஆதித்திய சோழன் உதவினான். இறுதியில் பாண்டியமன்னன் தோற்றான். இவ்வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்திய சோழன் கட்டிய கற்றளி இங்குள்ளது.

திருப்பெயர்கள் :

சிவபெருமான் : ஸ்ரீசாட்சிநாத சுவாமி

அம்பாள் : இட்சுரசவாணி (கரும்பனைய சொல்லம்மை )

விநாயகர் : பிரளயம் காத்த விநாயகர்



தேனாபிஷேகம்:

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் விநாகன சதுர்த்தியன்று இரவும், பகலும் தேனாபிஷேகம் நடைபெறும் வேறு எப்பொழுதும் எப்பொருளாலும் இவ்விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் செய்யும் தேன்முழுவதும் விநாயகர் திருவுருவம் உறிஞ்சிவிடுவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும். விநாயகரின் திருவுருவம் வெளிர்மஞ்சள்நிறம் (சந்தன நிறம்), தேன் அபிஷேகம் செய்தபிறகு செம்பவள நிறமாக ஜொலிக்கிறார். 

அமைவிடம் :

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு வடமேற்குத் திசையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து அடிக்கடி நகரப்பேருந்துகள் உள்ளன.

பலன்கள்:

விநாயகர் சதுர்த்தியன்று இரவு தேன் அபிஷேகம் தரிசித்துப் பிரார்த்தனை வைத்துக்கொண்டால் அடுத்த வருஷம் தேன் அபிஷேகம் வருவதற்குள் அக்காரியம் நிறைவேறும். பிரளயத்திலிருந்தே ஊரைக் காத்தவரானதால் எவ்வளவு பெருந்துன்பம் வந்தபோதிலும் அதனை இவ்விநாயகர் நீக்கி அருள்வார்.

ஆலயம் தேடுவோம். பகுதி - 2 https://meelpaarvai.blogspot.com/2024/05/2.html




Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்