மணக்குள விநாயகர்
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள் போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம்.
தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது புதுச்சேரி - மணக்குள விநாயகர்.
2.புதுச்சேரி - மணக்குள விநாயகர்.
Puthucheri Manakkula Vinayakar Temple. |
1.தலவிசேஷம்:
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து தற்போது யூனியன் பிரதேசமாக விளங்கும் புதுச்சேரி மாநிலம், பலவகையில் சிறப்புப் பெற்றது. இதன் தலைநகரான பாண்டிச்சேரியில் தான் மகான் அரவிந்தர் தங்கி ஆன்மிகப் பயிர் வளர்த்தார். இங்குள்ள மொத்தக் கோயில்கள் 365 ஆகும். இவற்றுள் விநாயகர் கோயில்களே அதிகம். இக்கோயில்களுள் புகழ் பெற்றது மணக்குள விநாயகர் ஆலயமாகும். இது 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற பழமையான ஆலயமாகும்.
2.பெயர்க்காரணம் :
இந்தக் கோயிலுக்கு அருகில் ஒரு திருக்குளம் உள்ளது. அக்குளத்தில் முற்காலத்தில் வற்றாத நீரூற்று இருந்தது. அந்த நீர் சுவையான நீர். மணலால் ஆன அக்குளத்துக்கு "மணல் குளம்" எனப்பெயர். அப்பெயரே காலப்போக்கில் மணக்குளம் என்றானது. இந்த மணற்குளத்து நீரால்தான் விநாயகருக்குத் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தற்போது அக்குளத்தில் தண்ணீர் இல்லை. இவருக்கு வெள்ளைக்காரப் பிள்ளையார் என்னும் பெயரும் உண்டு.
பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந்த சிலையைக் கடலில் கொண்டு போய் போட்டு விட்டார்கள். ஆனால் என்ன அதிசயம்? சில நாட்களில் அந்தச்சிலை மீண்டும் கடற்கரையில் அதே இடத்தில் வந்து கிடந்தது. மக்கள் அந்தக் கடற்கரையில் ஒரு ஆலயம் அமைத்து விநாயகரை வழிபட்டார்கள். பிரெஞ்சுக்காரர்கள் பலரும் பயபக்தியுடன் வணங்கினர். எனவே தான் இப்பிள்ளையாருக்கு வெள்ளைக்காரப் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது. பல மதத்தினரும் இங்கு வந்து விநாயகரை வணங்கி அருள்பெற்றுச் செல்கின்றனர். இதன் அருகில்தான் அரவிந்த ஆசிரமம் அமைந்துள்ளது. அரவிந்தர் அன்னையார் சமாதிகள் தரிசிக்கத் தக்கவை.
3.திருநாமம்:
மணக்குள விநாயகர், வெள்ளைகாரப்பிள்ளையார் கிழக்குப் பார்த்த சந்நிதி. அழகான சிறிய கோயில் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. நான்கு திருக்கரங்களுடன் சிறிய அளவிலான மூர்த்தி. இவ்வாலயச் சுவர்களின் உட்புறம் விநாயகரின் புராணக் செய்திகள் மற்றும் வரலாற்றுச் செய்திகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கடற்கரையோரம் அமைந்த அழகான தலம்.
புதுவைக்கு வந்த புலவர்கள் பலரும் இந்த விநாயகப் பெருமானை பாமாலை பாடி வணங்கியுள்ளனர். மகாகவி சுப்ரமணியபாரதியாரும் இவ்விநாயகர் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். தமது விநாயகர் நான்மணி மாலையில்
"பயனதில் நான்காம் அறம் பொருள் இன்பம் வீடென்று முறையே தன்னை யாளுஞ் சமர்த்தனுக்கருள்வாய் மணக்குள விநாயகர்" - என்றும்
"வாழ்க ! புதுவை மணக்குளத்து வள்ளல்பாத மணிமலரே" என்றும் பணிந்து வேண்டுகிறார்.
4.அமைவிடம்:
தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் புதுச்சேரிக்குப் பேருந்து வசதியுள்ளது. புகைவண்டி நிலையமும் உள்ளது. புகைவண்டி வசதி குறைந்த அளவுதான் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரியில் புகழ்பெற்ற 3 சக்கரவண்டிகளில் இவ்வாலயம் செல்லலாம்.
5.பார்க்க வேண்டிய பிற இடங்கள் :
அரவிந்த ஆசிரமம், கடற்கரை, பாரதியார் வாழ்ந்த இல்லம், மியூசியம், "ஆரோவில்" என்று அழைக்கப்படும் சர்வதேச நகரம், தில்லையில் மாணிக்கவாசக சுவாமிகள் சொல்ல, நடராசப் பெருமான் எழுதியதாக வரலாறு கூறும் திருவாசக ஏடுகள், அம்பலத்தாடிகள் மடம் போன்றவை உள்ளன.
6.பலன்கள் :
இவ்விநாயகரை வணங்கினால் மனதில் அன்பும், அமைதியும் உண்டாகும். காரியத் தடைகள், தாமதங்கள் விலகும். தொடர்பு விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடரும்.
ஆலயம் தேடுவோம். பகுதி - 1 https://meelpaarvai.blogspot.com/2024/05/1.html
Comments
Post a Comment