ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள் போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம்.
தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
இன்றைய பகுதியில் முதலில் நாம் காண இருப்பது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.
தல விசேஷம் :
விநாயகருக்கு என்று தனியாக அமைந்த தலங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகர் வடக்குப் பார்த்த சந்நிதி குடைவரைக்கோயில் ஒரு சிறு குன்று போன்றமைந்த பாறையைக் குடைந்து விநாயகரின் திருவுருவமும், மூலஸ்தான மண்டபமும் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அநேகமாக தமிழகத்தின் விநாயகர் தலங்களில் இதுவே மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. இங்கு சிவபெருமானுக்குத் தனிச்சந்நிதியும், அம்பிகைக்குத் தனிச்சந்நிதியும் உள்ளன. கிழக்கு பிரதான வாயில்; வடபுறம் வாயிலும் உண்டு.
மூர்த்தி அமைப்பு:
விநாயகரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரம் உள்ளதாகவும், துதிக்கை வலப்புறம் திரும்பிய நிலையில் வலம்புரி விநாயகராகவும் காட்சி தருகிறார். விநாயகருக்கு இங்கு இரண்டு கைகள் விநாயகரிடம் இருக்கும் அங்குசம், பாசம் இல்லை. வலக்கையில் சிறு சிவலிங்கம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் இரண்டு கால்களையும் மடித்து அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து உள்ளார். குடைவரைச் சிலையானதால் பின்புறம் பாறையுள்ளது. புடைப்புச் சிற்பம். இங்கு கொஞ்சம் வித்தியாசமாக இடப்புறத்தந்தம் குறுகியும், வலப்புறத் தந்தம் நீண்டும் உள்ளது.
திருநாமம்:
சிவபெருமான் : அர்ஜுனவனேசுவரர், மருதீசர்
அம்பாள் : வாடாமலர் மங்கை
விநாயகர் கற்பகவிநாயகர் "கற்பகக் களிறே" என்று ஔவையார் விநாயகர் அகவலிலும், "கற்பக விநாயகக் கடவுளே போற்றி" என்று மகாகவிபாரதியும், "கற்பகம்" என்று கவியரசு கண்ணதாசனும் பாடியுள்ளனர்.
தல அமைவிடம்:
காரைக்குடி - மதுரை சாலையில் திருப்பத்தூருக்கும், குன்றக்குடிக்கும் இடையே அமைந்துள்ளது. இத்தலத்திற்கு அருகில் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப் பெருமான் ஆலயமும், திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயமும் அமைந்துள்ளன.
சிறப்பம்சம்:
இந்த ஆலயத்தில் அர்ச்சனைக்குக் கட்டணங்கள்
வசூலிப்பதில்லை. அபிஷேகக் கட்டளை மட்டும் உண்டு. சேவார்த்திகளுக்கு நண்பகல் அருமையான செட்டிநாட்டுச் சுவையில் உணவு அளிக்கப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்திற்குட்பட்டது.
பலன்கள்:
ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இங்கு செய்து கொள்வது விசேஷம். உடல் வியாதிகள் நீங்கி நலம் கிடைக்கும். அறிவும், ஆற்றலும் வளரும். சுகமான வாழ்வு அமையும். நல்ல நம்பிக்கைகளைத் தும்பிக்கையான் பலிதமாக்குவான். எடுத்தகாரியம் யாவிலும் வெற்றியுண்டாகும்.
எப்படி செல்வது :
காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் பிள்ளையார் பட்டி கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் - குன்றக்குடி பேருந்துகளில் பயணித்தால் பிள்ளையார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலை எளிதில் அடையலாம்.
Comments
Post a Comment