நல்ல மாம்பழம் எப்படி கண்டுபிடித்து வாங்குவது?
மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சுவை என்பது அலாதி தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் தமிழத்தில் மாம்பழ சீசன் களை கட்டும். இந்தாண்டு சுட்டெரிக்கும் வெயிலினால் மாம்பழ வரத்து குறைந்துள்ளது. இருந்தாலும்கூட அவற்றை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
மாம்பழம் அனைத்து வயதினரும் ரசித்து உண்ணும் பழமாகும். இந்த ஏப்ரல், மே, ஜூன் காலகட்டத்தில் தான் முக்கனிகளான மா, பலா, வாழை என மூன்றும் சரளமாக கிடைக்கும்.
மாம்பழ சீசனில் என்ன என்ன ரகங்கள் முதலில் விற்பனைக்கு வரும் என்று பார்த்தால் அல்போன்சா, மல்கோவா, பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரா, காலாபாடி என்ற பல ரகங்கள் மாம்பழம் விற்பனைக்கு வரும். கடைசியாக ரூமானியும் அதைத் தொடர்ந்து நீலம் மாம்பழம் விற்பனைக்கு வந்தாலே சீசன் முடிந்தது என்று அர்த்தம். மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் நிறைந்துள்ளன.
மாம்பழங்களை பழுக்க வைக்கும் முறை:
மாம்பழங்களை பொதுவாக வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை போட்டு அதில் வரும் வெப்ப காற்றினால் உருவாகும் எத்திலின் வாயு மூலமாக இரண்டு நாளில் நன்றாக பழுத்து சாப்பிட உகந்ததாக மாறும். இது இயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைக்கும் முறையாகும்.
இன்றைய அவசர உலகில் தேவை நாளுக்குநாள் அதிகரிப்பதால் காய், முற்றாத காய் போன்றவற்றை பிடுங்கி உடனே பழமாக மாற்றிட "கால்சியம் கார்பைடு கல் மூலமாக அசிட்டிலின் எனப்படும் வாயுவை செலுத்தி ஒரே நாளில் பழுக்கவைத்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த வேதிப்பொருளால் நிறைந்த மாம்பழங்களை உண்பதால் சிலருக்கு ஒவ்வாமை எற்பட்டு, நரம்பு மண்டல பிரச்சனை மற்றும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இரசாயனம் கலந்த மாம்பழங்களை எளிதாக கண்டிபிடிக்கலாம்:
1) வாசனை :
கல்வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் வாசனை இருக்காது. அவற்றை முகர்ந்து பார்த்தாலே மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
2) சுவை :
இயற்கையில் பழுத்த மாம்பழங்கள் மிகவும் இனிப்பாகவும், மணமாகவும் இருக்கும். ஆனால் கல்வைத்த பழங்கள் சுவையின்றி இருக்கும்.
3) நிறம் :
இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழம் என்றால் பச்சையும் மஞ்சளும் கலந்திருக்கும். பழம் எந்தளவிற்கு கனிந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு வாசனையுடன் இருக்கும்.கல்வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழம் என்றால் எல்லா பக்கமும் ஒரே மாதிரி நிறமாக மஞ்சளாக இருக்கும். ஆங்காங்கு தோலில் வெந்தது போன்று கருப்பாக இருக்கும்.
4) தன்மை :
மாம்பழம் பார்ப்பதற்கு நன்றாக பழுத் தது போலவே இருக்கும். ஆனால் அதை வெட் டும் போது கரகரவென இருக்கும். நெகழ்ச்சியாக இருக்காது.
கண்டுபிடிக்க எளிய முறைகள்:
வாங்கி வந்த மாம்பழங்களை 2 மணி நேரம் ஒரு தொட்டி தண்ணீரில் போடவேண்டும். இரசாயனம் கலந்த மாம்பழங்கள் என்றால் தண்ணீரில் மிதக்கும். இரசாயன கலக்காத பழம் என்றால் தண்ணீரில் மூழ்கிவிடும். இதிலிருந்து எளிதாக கண்டுபிடிக்கலாம்.
எனவே நல்ல தரமான மாம்பழங்களை தேடி அதனை தட்டி பார்த்து வாங்கிட வேண்டும். இரசாயனமற்ற இயற்கையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்கி உண்போம். சுவையோடு ஆரோக்கியம் காப்போம்.
Comments
Post a Comment