15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூன் 5, 6-ஆகிய தேதிகளில் 15
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரம் - வட தமிழக கடலோரப் பகுதிகளிலும், தென் தமிழகப் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை ஜூன் 5 முதல் ஜூன் 10 வரை தமிழகத் தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் ஜூன் 5-இல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஜூன் 6-இல் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): சேலம் -90, அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) 70, தேவாலா (நீலகிரி), கரியகோவில் அணை (சேலம்) தலா-60 மி.மீ. புதுக்கோட்டை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
வெப்பம் அதிகரிக்கும்:
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன் முதல் சனிக்கிழமை(ஜூன் 5-8) வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும்.
சென்னையில் மழை :
சென்னையில் செவ்வாய்க்கிழமை அம்பத்தூர், கொரட்டூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மற்றும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.ஜூன் 5,6 ஆகிய தேதிகளில் சென்னை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்ப நிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
Comments
Post a Comment