தென்மேற்கு பருவமழை
அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
வழக்கமாக ஜுன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.. ஆனால் இந்த வருடம், முன்னதாகவே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதற்கேற்றவாறு, தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்குவாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு:
அந்த அறிவிப்பில், "தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் துவங்க வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கும், வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும், வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும்.
மானாவாரி சாகுபடி:
நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, சென்னை வானிலை மையமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், தமிழகத்தில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம்:
தமிழகத்தில் இன்று 28ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஒன்றரை மாத காலம் வாட்டி வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது.
Comments
Post a Comment